FAQs on Joining the Ramakrishna Order (Tamil)


Read in  English  | हिंदी  |    বাংলা   |  తెలుగు  |  മലയാളം  |  ଓଡ଼ିଆ  |  ગુજરાતી  |  मराठी  |  ಕನ್ನಡ  |  অসমীয়া  


ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்வது சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளும் பதில்களும்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் இளைஞர்கள் பலர் படித்து அவற்றிலிருந்து உத்வேகம் பெற்று அவர்களும் ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவு வாழ்க்கை மேற்கொள்ள எண்ணுகிறார்கள். வேதாந்தம் பற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டும் சிலருக்குத் துறவு ஆசை ஏற்படலாம்; உலக இன்பங்களின் நிலையற்ற தன்மையை உணர்ந்து சிலருக்குத் துறவு ஆசை தோன்றலாம். ராமகிருஷ்ண சங்கத்தின் துறவிகள் செய்யும் சேவைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தப் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பும் கர்ம வீரர்களும் உண்டு. தூண்டுதல் எதுவாக இருந்தாலும், மடத்தில் துறவியாகச் சேரும் முன் பல விஷயங்களை ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். அப்படிச் சேர நினைக்கும் வருங்காலத் துறவிகளுக்காகவே சில விஷயங்கள் இங்கு கேள்வி–பதில் வடிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

  1. ராமகிருஷ்ண சங்கம் என்றால் என்ன?

இங்கு ‘சங்கம்’ என்பது ஒரே லட்சியத்தைக் கொண்ட துறவிகளின் சங்கத்தைக் குறிக்கிறது. ராமகிருஷ்ண சங்கம் ஒரு பதிவு பெற்ற இயக்கம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களின் அடிப்படையில் அவரது சீடர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அவர்களில் தலைமைச் சீடர் சுவாமி விவேகானந்தர். தூய அன்னை ஸ்ரீசாரதாதேவி தனது ஆன்மீக நிலையில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குச் சமமாக விளங்கினார். தாயன்புடனும் ஆன்மீக உயர்வுடனும் அவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராமகிருஷ்ண சங்கத்தை வழிநடத்தினார்.

ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷன் என்ற இரண்டு அமைப்புகளைக் கொண்டது ராமகிருஷ்ண சங்கம். இவை இரண்டும் பதிவு செய்யப்பட்டவை. இவற்றின் தலைமையகம் பேலூர் மடம். இதற்கு உலகம் முழுவதும் 200–க்கும் அதிகமான கிளைகள் உள்ளன. இந்த இரண்டு அமைப்புகளின் வரலாறு, நோக்கம், மற்றும் செயல்பாடுகளைப் பற்றி இங்கு (website) அறியலாம்.

  1. ராமகிருஷ்ண சங்கத்தில் ‘சேர்தல்’ என்றால் என்ன?

குடும்பம், நண்பர்கள், தொழில், வேலை, உலகப் பற்றுகள் என அனைத்தையும் விட்டுத் துறவு வாழ்க்கையை மேற்கொள்வது; ராமகிருஷ்ண மடத்தின் ஏதாவது ஒரு கிளையில் தங்கித் தனது வாழ்க்கையை ஆன்மிக சாதனைக்காகவும் பலன் எதிர்பாராத சேவைக்கும் அர்ப்பணித்துக்கொண்டு வாழ்வது — இதுவே ராமகிருஷ்ண சங்கத்தில் ‘சேர்தல்’ என்பது.

  1. ராமகிருஷ்ண சங்கத்தில் துறவி ஆவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன?

– ஆண்கள் மட்டுமே ராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து துறவி ஆக முடியும். 18 முதல் 28 வரை வயதுடையவர்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் பொறியியல், மருத்துவம் படித்தவர்களுக்கும் உச்ச வயது வரம்பு 30. மேலை நாட்டவருக்கு உச்ச வயது வரம்பு 36. மேலும் விவரங்களுக்கு பேலூர் மடத்தைத் தொடர்பு கொள்ளவும்: <mail@rkmm.org>

  1. இளம்பெண்கள் துறவு வாழ்க்கை வாழ விரும்பினால் மடத்தில் சேரலாமா?

ராமகிருஷ்ண சங்கம் ஆண்களுக்கானது மட்டுமே. பெண்களுக்கு ஸ்ரீசாரதா மடம் என்ற தனி அமைப்பு உள்ளது. அவர்களும் ராமகிருஷ்ண மடத்தின் லட்சியங்களைப் பின்பற்றுபவர்களே! துறவு வாழ்க்கை வாழ விரும்பும் பெண்கள் ஸ்ரீசாரதா மடத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். ஸ்ரீசாரதா மடத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் தட்சிணேசுவரத்தில் உள்ளது. மின்னஞ்சல்: <saradamath.office@gmail.com>

  1. நான் திருமணமானவன். என்னால் மடத்தில் சேர முடியுமா?

மன்னிக்கவும்! திருமணமாகாத ஆண்கள் மட்டுமே சேர முடியும். விவாகரத்து பெற்றவர்களும் சேர முடியாது. இருந்தாலும், எல்லோரும் பக்தர்களாகவோ அல்லது தன்னார்வலத் தொண்டர்களாகவோ நமது சங்கத்துடன் எப்போதும் இணையலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிளை மடத்தை அணுகவும்.

  1. எல்லாவற்றையும் துறக்கப் போகிறவனுக்கு ஏன் கல்வித் தகுதி வலியுறுத்தப்படுகிறது?

ஆன்மீக வாழ்க்கைக்குக் கல்வித் தகுதி தேவையில்லைதான். ஆனாலும், பின்வரும் காரணங்களுக்காக கல்வித் தகுதி அவசியமாகிறது.

a) துறவு வாழ்க்கையை மேற்கொள்வது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு. அப்படி முடிவெடுப்பதற்கு மன முதிர்ச்சி அவசியம்; அத்தகைய மன முதிர்ச்சிக்குப் படிப்பு துணைபுரியும்.

b) பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல்வேறு அமைப்புகளை நமது மடத்தின் துறவிகள் நடத்தி நிர்வகிக்கின்றனர். அதன் மூலம் மக்களுக்குப் பலவழிகளிலும் சேவை புரிகின்றனர். இன்னும், தேசிய அளவிலும் உலகளவிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அழைக்கப்படலாம். உயர்ந்த கல்வித் தகுதி இருந்தால் இந்தச் சூழ்நிலைகளைச் சிறப்பாகக் கையாளலாம்.

c) சில இளைஞர்கள் வேறுவழியில்லாமல் கடைசிபட்சமாகத் துறவு வாழ்க்கைக்கு வருகின்றனர்; சிலர், வாழ்க்கையில் எல்லா நம்பிக்கைகளையும் இழந்து துறவு வாழ்க்கைக்குத் தள்ளப்படுகின்றனர். ஒருவேளை அவர்கள் படிப்பதற்கும் பரீட்சைக்கும் பயந்தவர்களாக இருக்கலாம்; சரியாகப் படிக்காததால் அவர்கள் விரும்பும் வேலையைப் பெற முடியாதவர்களாக இருக்கலாம்! அல்லது வேறெதாவது விரக்தியாக இருக்கலாம்! இப்படிப்பட்டவர்கள் மடத்தில் சேர்வதைத்  தவிர்க்கவே படிப்பையும் வயது வரம்பையும் வைத்திருக்கிறோம்.

  1. கல்லூரி மாணவனாகிய நான் ராமகிருஷ்ண மடத்தில் சேரலாமா?

ஆரம்பித்த படிப்பை முடித்த பிறகு மடத்தில் சேர்வது நல்லது. மடத்தில் சேர்வதற்காக உங்களது படிப்பை பலிகடா ஆக்கிவிடாதீர்கள்! படிப்பை முடிக்கும் வரை நமது மடத்தின் ஏதாவது ஒரு கிளையில் உங்களது ஓய்வு நேரத்தில் சேவை புரியலாம்.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு எனது உயர் கல்வியைத் தொடர முடியுமா?

பொதுவாக, மடத்தில் சேர்வதற்கு முன்பே படிப்பை முடிந்திருக்க வேண்டும்.

  1. உடல் நலக் குறைவு இருந்தால் மடத்தில் சேர முடியுமா?

மடத்தில் சேர்வதற்கு நல்ல உடல் நலம் அவசியம். துறவிகள் மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும்; மற்றவர்களது சேவையை ஏற்பது சரியல்ல. எனவே, மடத்தில் சேரும்முன் முழு மருத்துவப் பரிசோதனை கட்டாயம். மனதளவிலும் உடலளவிலும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மடத்தில் சேர முடியாது. மிகவும் கடினமான துறவு வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது; அவர்கள் மற்றவர்களுக்குப் பாரமாகிவிடுவர்.

  1. பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் நூல்களை நான் படித்ததில்லை; நான் மடத்தில் சேரலாமா?

உடனடியாகச் சேர வேண்டாம். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் சம்பந்தமான முக்கியமான சில நூல்களையாவது படியுங்கள்.

  1. வேதாந்தத்தை ஆழமாகப் படிக்க விருப்பம் உள்ளது. மடத்தில் சேர்ந்த பிறகு முடியுமா?

நிச்சயம். பகவத் கீதை, உபநிஷதங்கள் முதலிய வேதாந்த நூல்களைப் படிப்பதற்கு நமது மடத்தில் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. மடத்தில் சேர்ந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு எல்லா பிரம்மச்சாரிகளுக்கும் பேலூர் மடத்தின் பயிற்சி மையத்தில் (Training Centre) இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. அங்கு வேதாந்தம் மற்றும் பல ஆன்மீக நூல்கள் கற்றுத் தரப்படும்.

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் மற்ற துறவிச் சீடர்களின் வாழ்க்கையும் அறிவுரைகளும் ஒருவிதத்தில் வேதாந்தமே! வேதாந்தம் கூறும் உண்மைகளை அவர்கள் தங்களது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். வேதாந்தத்தை வெறும் கல்வியாகக் கற்காமல், அவர்களைப் போன்று ஆழ்ந்த நம்பிக்கை பெறுவதற்கும் ஆன்ம அனுபூதி பெறுவதற்கும் வேதாந்தத்தைக் கற்க வேண்டும். அப்படிப்பட்ட வகையில் நமது மடத்தின் துறவிகளுக்கு வேதாந்தம் போதிக்கப்படுகிறது.

  1. நான் இந்து அல்ல; என்னால் மடத்தில் சேர முடியுமா?

ராமகிருஷ்ண மடம் எல்லா மதத்தினருக்குமானது; தங்களது மதம், இனம், தேசியம் எதுவாக இருந்தாலும்  மடத்தில் சேரலாம். ஆனால், ‘எல்லா மதங்களும் ஒரே இலக்கையே சென்றடைகின்றன’, ‘மனித சேவையே இறை சேவை’ முதலிய ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை ஏற்பதற்கும் தூய துறவு வாழ்க்கை வாழ்வதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

  1. நான் கிருஷ்ண பக்தன் (சிவ, காளி, ஏசு கிறிஸ்து அல்லது மற்ற தெய்வங்களின் பக்தன்); என்னால் மடத்தில் சேர முடியுமா?

அதனால் எந்த சிக்கலும் கிடையாது;  பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் மீது மதிப்பும் அவரது போதனைகளில் நம்பிக்கையும் இருந்தால் போதும்; மடத்தில் சேரலாம்.

  1. நமது நாட்டிற்கு, குறிப்பாக ஏழைகளுக்கும் உதவியற்றவர்களுக்கும் சேவை செய்ய மடத்தில் சேரலாமா?

சேரலாம்! ஆனால் சேவை என்றால் என்ன என்பதைப் பரந்த மனதுடன் உணர்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். வெறும் சமூக சேவை செய்வதற்காக ஏற்பட்ட மற்றுமொரு NGO அல்ல நமது மடம். ‘தனது சொந்த முக்திக்காகவும் உலக நன்மைக்காகவும்’ (ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச) என்பதை நமது லட்சியமாக சுவாமி விவேகானந்தர் வைத்துள்ளார். ஆன்மீகமே நமது மடத்தின் அடிப்படை; அதுவே நம்மை வழிநடத்துகிறது; அதுவே லட்சியம். தாங்கள் செய்யும் சேவைப்பணிகளை ஆன்மீக சாதனையாகவே நமது துறவிகள் கருதுகின்றனர். எனவே, நமது மடத்தில் இருப்பதற்கு ஆன்மீகக் கண்ணோட்டம் அவசியம்; வெறும் கருணை கொண்ட உள்ளம் அல்லது நாட்டுப்பற்று மட்டும் போதாது.

  1. நான் துறவு வாழ்க்கை வாழ விரும்புகிறேன்; ஆனால் எனது பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள். என்ன செய்வது?

பெற்றோரின் சம்மதம் விரும்பத்தக்கதுதான்; ஆனால் அது கட்டாயமல்ல. மடத்தில் சேர விரும்பும் நீங்கள் உங்களது முடிவுகளை நீங்களே எடுக்கக்கூடிய பருவத்தை அடைந்தவர். தங்களது மகன் துறவி ஆவதற்கு அபூர்வமாகத்தான் பெற்றோர்கள் சம்மதிக்கிறார்கள். எனவே, பலரும் இந்த விஷயத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பையும் கோபத்தையும் சந்தித்தே ஆகவேண்டும். ஆனால், துறவு வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், உலகியல் இன்பங்களின் மீது உனக்குள்ள உண்மையான வைராக்கியமே, உலகப் பொறுப்புகளைத் தவிர்க்கும் எண்ணமல்ல என்று நீங்கள் உறுதியாக எண்ணினால், உங்களை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரம், பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு சில ஆண்டுகளில் தங்களது மகன் மடத்தில் சேர்ந்ததை ஏற்றுப் பெருமையும் கொள்கின்றனர்.

துறவு வாழ்க்கை என்பது இன்று நேற்று வந்ததல்ல; அது பண்டைய காலத்திலிருந்து தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிறது. சாஸ்திரங்களும் அதை அனுமதிக்கின்றன. ‘யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத்’ (வைராக்கியம் தோன்றிய அதே நாளில் துறவு மேற்கொள்) என்கிறது ஜாபாலோபநிஷதம். வீட்டிலிருந்து தீவிர எதிர்ப்பு ஏற்பட்டால் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கலாம்.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு பெற்றோருடனும் மற்ற உறவினர்களுடனும் தொடர்பு வைத்துக் கொள்ளலாமா?

தேவைப்பட்டால், ஆரம்ப நாட்களில் பெற்றோருடன் சற்றுத் தொடர்பு வைத்துக் கொள்ளலாம், அவர்களது நலனை விசாரிக்கலாம்.  ஆனால், படிப்படியாக ஒரு துறவி தனது பழைய எல்லாத் தொடர்புகளையும் கைவிட வேண்டும். ஒரே நாளில் யாராலும் அப்படி விட்டுவிட முடியாதுதான்! எனவே, உலகியல் தொடர்புகளை நீக்குவதன் மூலம் பற்றற்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  1. என் பெயரில் சொத்து இருக்கிறது. மடத்தில் சேர்ந்துவிட்டால் என்ன ஆகும்?

துறவிக்குத் தனிச் சொத்து கூடாது. சாஸ்திரங்களும் சட்டமும் அதையே கூறுகின்றன. எனவே, உனது எல்லாச் சொத்துக்களையும் கூடிய விரைவில் ஏதோ ஒரு வகையில் உதறித் தள்ளிவிட வேண்டும். மடத்தில் சேர்வதற்கு முன்பு இதைச் செய்யாவிட்டால் சேர்ந்த பிறகாவது கூடிய விரைவில் செய்ய வேண்டும்.

  1. மடத்தில் எனக்கு சம்பளம் கிடைக்குமா?

துறவிகளுக்கு சம்பளம் கிடையாது; அது துறவு வாழ்க்கைக்கு எதிரானது. சம்பளத்தை எதிர்பார்த்து வேலை செய்வதல்ல துறவு வாழ்க்கை. எதையும் எதிர்பார்க்காமல் உனது உடல், -மனம், திறமை இவை எல்லாவற்றையும் மனமுவந்து முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்.

  1. நான் மடத்தில் சேர்ந்துவிட்டால் எனது தனிப்பட்ட தேவைகளை யார் கவனிப்பார்கள்? வயதாகிவிட்டால் யார் கவனித்துக் கொள்வார்கள்?

எல்லாவற்றிற்கும் கடவுளையே முழுமையாக நம்பி வாழ்வதுதான் துறவு வாழ்க்கை. இருந்தாலும் மடம் உங்களை எப்போதும் கவனித்துக் கொள்ளும். அதுபற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்?

மடத்தில் வேஷ்டியும், கழுத்துப்பட்டை இல்லாத சட்டையும், சட்டையின் மீது துண்டும்தான் எல்லோருக்கும் உடை. பிரம்மச்சாரிகள் உடையின் நிறம் வெள்ளை; சந்நியாசிகள் உடையின் நிறம் காவி.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு எவ்வளவு வருடங்கள் கழித்து துறவியாக முடியும்?

பொதுவாக ஒன்பது வருடங்கள் ஆகும். சந்நியாச தீட்சை பெறுவதற்குத் தன்னைத் தயார் செய்துகொள்ள இவ்வளவு காலம் கொடுக்கப்படுகிறது. தீட்சை பெற்ற பிறகு ‘சுவாமி’ பட்டமும் ‘ஆனந்த’ என்று முடியும் புதிய பெயரும் வழங்கப்படும்.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு என்ன செய்ய வேண்டும்?

மடத்தில் சேர்ந்த பிறகு, ‘தனது சொந்த முக்திக்காகவும் உலக நன்மைக்காகவும்’ (ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச)என்ற இரண்டு லட்சியங்களை அடைவதற்கு உனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க வேண்டும். அதாவது ஆன்மீக சாதனை மற்றும் தன்னலமற்ற சேவையில் உன்னை முற்றிலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். ஜபம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, பாராயணம் செய்தல், நாம சங்கீர்த்தனம், சாஸ்திரங்களைக் கற்றல் முதலியன ஆன்மீக சாதனைகள் ஆகும். இவற்றில் ஜபமும் தியானமும் மிகவும்  முக்கியமானவை, தினசரி செய்ய வேண்டியவை. சிலவற்றை தனியாகச் செய்ய வேண்டும், சிலவற்றை மற்ற துறவிகளுடன் சேர்ந்து செய்ய வேண்டும். இவற்றுடன் தன்னலமற்ற சேவை பணிகளிலும் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட வேண்டும்; அதன் மூலம் மடத்தின் பல்வேறு பணிகளில் உங்களது பங்கை அர்ப்பணிக்கலாம். மடத்திற்காகவோ அல்லது மக்களுக்காகவோ எந்த பணிகளைச் செய்தாலும் அவற்றை ஒரு வழிபாடாக செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் அதுவே ஒரு வகையில் ஆன்மீக சாதனை ஆகிறது.

உனது வாழ்நாளை இந்த விதமாகக் கழிப்பதன்மூலம் உன்னிடம் தூய்மை, பக்தி, பற்றின்மை, தன்னலமின்மை, சத்தியம், பிரம்மச்சரியம் முதலிய துறவிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் வளர்கின்றன; அதன்மூலம் நீ இறைவனை உணர்வாய்.

  1. ராமகிருஷ்ண சங்கத்தில் சாதனை முறை என்ன?

கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம் என்ற நான்கு யோகங்களின் ஓர் இணக்கமான கலவையை நமது  மடம் பின்பற்றுகிறது. அதன்மூலம் ஒருவன் முழு வளர்ச்சி பெறுகிறான். சென்ற கேள்வியின் பதிலில் கூறிய வாழ்க்கை முறையை திடமான நம்பிக்கையுடன் பின்பற்றும்போது இந்த நான்கு யோகங்களும் எளிதில் கைகூடும்.

நான்கு யோகங்களின் இணக்கமான கலவையை சங்கத்தின் சின்னத்திலேயே சுவாமி விவேகானந்தர் வடிவமைத்துள்ளார். அதன் விளக்கத்தை இங்கு (Emblem Link) காணலாம்.

  1. பிரம்மச்சரிய வாழ்க்கை என்றால் என்ன என்பது பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். அதுபற்றிப் படிப்பதற்கு ஏதாவது நூல்களோ அல்லது வழிகாட்டிகளோ இருந்தால் கூறவும்.

சுவாமி விவேகானந்தர் பலநேரங்களிலும் பிரம்மச்சரியத்தைப் பற்றிப் பேசியுள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து இங்கு (link of Swamiji’s Quotes on Celibacy) கொடுத்துள்ளோம்.

அத்துடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நூல்களும் மிகவும் உதவியாக இருக்கும்.

சுவாமி ஸ்ரீகாந்தானந்தர் எழுதிய Youth! Arise Awake and Know your Strength என்ற நூலில் உள்ள Strength of Brahmacharya என்னும் அத்யாயம்.

சுவாமி அசோகானந்தர் எழுதிய Spiritual Practice என்னும் நூலில் உள்ள Brahmacharya என்னும் அத்யாயம்.

  1. மடத்தில் சேர்ந்த பிறகு எனக்கு வழிகாட்ட யாராவது ஆன்மீக குரு கிடைப்பாரா?

மடத்திலுள்ள மூத்த துறவிகளை அணுகினால் அவர்கள் உனது ஆன்மீக வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வழிகாட்டுவர். நீ சரியான பாதையில் முன்னேறுவதை அவர்கள் கவனிப்பர்.

  1. இதுவரை நான் மந்திர தீட்சை பெறவில்லை. என்ன செய்வது?

மந்திர தீட்சை என்பது ஒரு புனித நிகழ்ச்சி. அப்போது ஆன்மீக சாதகனுக்கு மந்திரத்தை குரு உபதேசிக்கிறார். அந்த மந்திரத்தை ஜபம் செய்யும் முறையையும், தியானம் செய்யும் முறையையும் அவர் கற்றுக் கொடுப்பார். நமது சங்கத்தில் தலைவர் மற்றும் உபதலைவர்  சுவாமிஜிகள் மட்டுமே தீட்சை வழங்குவர். அவர்களிடம் நீ ஏற்கனவே தீட்சை பெற்றிருக்காவிட்டால், மடத்தில் சேர்ந்த சில நாட்களில் தீட்சை பெற்றுக் கொள்ளலாம்.

  1. மடத்தில் எந்தக் கிளையிலும் சேரலாமா?

ஒரு சில கிளைகளைத் தவிர, பிரம்மச்சாரிகள் எந்தக் கிளையிலும் சேரலாம். வெளிநாடுகளிலுள்ள கிளைகளிலும் சேரலாம்.

பேலூர் மடத்திலும் சேரலாம். புதியதாகச் சேர்பவர்களுக்கு பேலூர் மடத்தில் Pre–Probationers’ Training Centre (PPTC) இருக்கிறது.

எந்தக் கிளையில் சேர்ந்தாலும் பேலூர் மடத்தில் இரண்டு வருடங்கள் பயிற்சி மையத்தில் (TC) தங்கிப் பயிற்சி பெற வேண்டும்.

  1. பேலூர் மடத்தில் சேர்வதில் என்ன சிறப்பு உள்ளது?

ராமகிருஷ்ண சங்கத்தின் இதயம் போன்றது பேலூர் மடம். அதுதான் நமது மடத்தின் தலைமையகம். அங்கு சுவாமி விவேகானந்தரும், ஸ்ரீராமகிருஷ்ணரின் மற்ற சில நேரடிச் சீடர்களும் வாழ்ந்தனர். அவர்களது புனிதமான தொடர்புகள் இருப்பதால் பலரும் தங்களது துறவு வாழ்க்கையை அங்கிருந்து தொடங்க விரும்புகின்றனர். புதியதாக மடத்தில் சேர்பவர்கள் பொதுவாக ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை PPTC–யில் இருப்பர். பின்னர் அவர்கள் மடத்தின் எந்தக் கிளைக்கும் அனுப்பப்படுவர்.

  1. எனது வீட்டின் அருகில் ராமகிருஷ்ண ஆசிரமம் உள்ளது. அங்கு நான் சேரலாமா?

‘ஸ்ரீராமகிருஷ்ணர்’, ‘சுவாமி விவேகானந்தர்’ ஆகியோரின் பெயர்களைத் தாங்கி இருக்கும் எல்லா ஆசிரமங்களும் எங்களது அதிகாரப்பூர்வ கிளைகள் கிடையாது. எனவே, சேர்வதற்கு முன் உனது வீட்டருகில் இருக்கும் ஆசிரமம் எங்களது அதிகாரப்பூர்வ கிளைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள். எங்களது அதிகாரப்பூர்வ கிளைகளை எங்களது இணையதளத்தில் <belurmath.org> காணலாம்.

  1. மடத்தின் ஒரு குறிப்பிட்ட கிளை எனக்கு மிகவும் பிடிக்கும். வாழ்நாள் முழுதும் அந்தக் கிளையிலேயே துறவியாக இருக்க முடியுமா?

மடத்தின் உனக்குப் பிடித்த கிளையில் நீ சேரலாம்; அங்கே முதல் மூன்று வருடங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு பேலூர் மடத்தின் மூத்த துறவிகள் உன்னை மடத்தின் எந்த கிளைக்கும் அனுப்புவர். அதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.

ஒரே கிளையில் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது துறவு வாழ்க்கைக்கு எதிரானது.

மடத்தின் உனக்குப் பிடித்த கிளையில் நீ சேரலாம்; அங்கே முதல் மூன்று வருடங்கள் வரை இருக்கலாம். அதன் பிறகு பேலூர் மடத்தின் மூத்த துறவிகள் உன்னை மடத்தின் எந்த கிளைக்கும் அனுப்புவர். அதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.

  1. வெளிநாடுகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துகளைப் பரப்ப எனக்கு வாய்ப்பு கிடைக்குமா?

வாய்ப்பு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம். பல காரணிகளையும் ஆராய்ந்த பிறகு, யாரை வெளி நாடுகளுக்கு அனுப்புவது என்பதை மடத்தின் தலைமையகமே முடிவு செய்யும்.

விருப்பு வெறுப்புகளைத் துறந்து, குருதேவரை மட்டுமே சார்ந்து வாழும் மனதுடன் மடத்தில் சேர்வதே மிகவும் நல்லது.

  1. பொதுவாக துறவு வாழ்க்கை பற்றியும், குறிப்பாக ராமகிருஷ்ண மடத்தைப் பற்றியும் விரிவாக அறிய ஏதாவது புத்தகம் உள்ளதா?

10-–வது கேள்வியின் பதிலில் கூறப்பட்ட நூல்களைப் படிப்பது போதுமானது.

அவற்றுடன் பின்வரும் நூல்களையும் படிக்கலாம்.

சுவாமி பஜனானந்தர் எழுதிய- The Glory of Monastic Life.

வேதாந்த கேசரி வெளியிட்ட சிறப்பு நூல்: -Monasticism – Ideal and Traditions.

  1. சேர்ந்த பிறகு மடத்தில் தொடர முடியாவிட்டால் மடத்திலிருந்து வெளியேறலாமா?

எப்போது விரும்பினாலும் மடத்திலிருந்து வெளியேறலாம். துறவு வாழ்க்கைக்கு மக்கள் தங்களது விருப்பத்தின் பெயரிலேயே வருகின்றனர்; எனவே தங்களது விருப்பத்தின் பெயரிலேயே வெளியேறவும் செய்யலாம். எந்தச் சட்ட சிக்கலும் கிடையாது; மடமும் சரி, வெளியேறுபவர்களும் சரி யாரும் யாருக்கும் பணவிஷயத்திலோ அல்லது வேறு வகையிலோ கடமைப்பட்டவர்கள் கிடையாது.

மடத்தை  விட்டு வெளியேறுவதால் உனது ஆன்மீகப் பயணம் முடிவடைந்துவிடும் என்பது கிடையாது. உனது ஆன்மீக சாதனைகளை எங்கிருந்தாலும் தொடரலாம்.

  1. நன்றி, எனது எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது. இருந்தாலும், மடத்தில் சேர்வதா அல்லது குடும்பத்தில் சாதாரண வாழ்க்கை வாழ்வதா என்று இன்னும் தெளிவு பிறக்கவில்லை. அதற்கு உங்களால் உதவ முடியுமா?

இதுபற்றி நீதான் முடிவு செய்ய வேண்டும். உண்மையில் நீ எது விரும்புகிறாய் என்பதை அறிந்து கொள்ள உனது மனதை கவனத்துடன் ஆராய்ச்சி செய். உனது மனதைத் திடமாகவும் வலிமையாகவும் ஆக்குவதற்கு இறைவனிடம் மன ஏக்கத்துடன் பிரார்த்தனை செய். அறிவார்ந்த பெரியோர்களிடம் நீ அறிவுரை கேட்கலாம்; ஆனால் இதற்கான இறுதி முடிவு உங்களுக்குள்ளிருந்தே வர வேண்டும்.

***